Saturday, July 25, 2009

The journey begins...

"நாளைக்கு பெரியசாமி கோயிலுக்கு போவலாமா?" என்றான் ராஜா. "அது எங்கலே இருக்கு?" என்றேன் நான். "அது முந்தல் மலைக்கு மேல இருக்குடே" என்றான் பின் சீட்டில் இருந்து ராஜேந்திரன். எங்கள் பள்ளியில் இருந்து ஐந்து மைல் தூரத்தில் இருக்கிறது மேற்குத்தொடர்ச்சி மலை. அதில் ஒரு குன்றுதான் முந்தல் மலை. அதற்கு முன்பு பல முறை முந்தல் மலைக்கு சென்றிருக்கிறோம். ஒரு முறை கெமிஸ்ட்ரி ஹோம் வொர்க் எழுதாமல் வந்ததால் நானும் ராஜேந்திரனும் காலையிலேயே கிளம்பி முந்தலுக்கு போய் குளித்து கொண்டாடிவிட்டு கிளம்பி வீட்டுக்கு போனோம்.
மேற்கு தொடர்ச்சி மலைக்குள் அதைத்தாண்டி நான் சென்றதில்லை.
"நான் ஒரு தடவை போயிருக்கேம்ல சூப்பரா இருக்கும் " என்றான் ராஜா. "ஆனா அதுக்கு முந்தல் வரைக்கு சைக்கிள்ல பேட்டு அங்கேருந்து நடந்து போணும்டே " என்றான் ராஜேந்திரன் . "ஓங்கிட்ட துட்டு இருக்கா? " என்று கேள்வி என்னை நோக்கி திரும்பியது. "எதுக்குலே? சைக்கிளுக்கா ?".. "சைக்கிளுக்கு வேணும் பெறவு திங்க எதாச்சும் வாங்கிட்டு போணும்லா ".."ஆமா அங்க போய் குளிச்ச பெறவு தீயா பசிக்கும்லே ".. "இத வீட்ல சொல்லி துட்டு கேட்டா எங்கம்மா கொன்றுவா.. நான் வேணும்னா ரொட்டி வாங்கியாறேன்டே எங்க ஊரு சென்ட்ரல்ல ரொட்டி-சால்னா சூப்பரா இருக்கும் நம்ம நாலுவேறு தான? பன்னெண்டு புரோட்டா வாங்கியாறேன்" என்றேன். "சேரி அப்டின்னா சைக்கிளுக்கு நாங்க காசு போடுதோம்" என்று ஒரு உடன்படிக்கைக்கு வந்தோம்.அதன் பிறகு அவர்கள் தங்கள் முந்தய பயணத்தின் வீர பிரதாபங்களை சிலாகித்து பேசிக்கொண்டு இருந்தனர். நான் பன்னெண்டு புரோட்டாவுக்கு எப்படி அடி போடுவதென்று யோசித்து கொண்டிருந்தேன். மறு நாள் காலை ஏழுமணிக்கே கிளம்பி விட்டேன். "ஏலே நீ பள்ளிக்கூடம் போவ ஆரம்பிச்ச நாள்ல இருந்து ஏழு மணிக்கு இன்னைக்குதாம்ல கெளம்பி இருக்க.." என்றாள் அம்மா... கிளம்புவதற்கு முன் என் பழைய டவுசருக்குள் ஏதேனும் காசு இருக்குமா என்று தேடி கொண்டிருந்தேன். "என்னத்துக்குல இப்டி தட்டளிஞ்சிகிட்டு கெடக்க " என்றாள் அம்மா .. "
"திங்க எதாச்சும் இருக்கா? " என்றேன். "ஏழு மணிக்கு நான் என்ன செய்யட்டும் என்றாள். "அப்டின்னா நான் போம்போது ரொட்டி வாங்கிட்டு போறேன் " என்றேன். "செத்த இரு உங்கப்பா வயலுக்கு பேட்டு வந்த பெறவு வாங்கி தாரேன். என்ன கொள்ளையா போவுது" என்றாள். "நான் சீக்கிரம் போணும் இல்லாட்டி ரிகர்சல் ஆரம்பிச்சுருவாங்க" என்று புலம்பினேன். உடனே எங்கிருந்தோ தேடி கொஞ்சம் சில்லரையாக கொண்டு வந்து கொடுத்தாள்.மொத்தம் பத்துரூபாய் ஐம்பது காசு தேறியது.
அவசர அவசரமாக கிளம்பி பஸ் ஸ்டாண்ட் சென்றேன்.பஸ் ஸ்டாண்டின் (ஆஸ்பத்திரி ஸ்டாப்) அருகில்தான் சென்ட்ரல் புரோட்டா ஸ்டால் இருந்தது. அங்கே சென்றால் அப்போதுதான் புரோட்டா போட மாவு பிசைந்து கொண்டிருந்தார் இல்லியாஸ் அண்ணாச்சி. சேரி இது வேலைக்கு அவாது என்று எண்ணியபடி புளியங்குடி பஸ்ஸை பிடித்தேன்.
திட்டமிட்டபடி எல்லோரும் 7:45 க்கு புளியங்குடி கட்டபொம்மன் பஸ் டிப்போ அருகே குழுமினோம். மொத்தம் முப்பத்தி இரண்டு ரூபாய் தேறியது . இரண்டு சைக்கிள் வாடகைக்கு எடுப்பதாக திட்டமிட்டோம்...
"ஆள் தெரியாட்டி ஒருத்தரும் சைக்கிள் தரமாட்டாங்க " என்றான் ராஜேந்திரன்...."பஸ் ஸ்டாண்ட் கிட்ட ஒரு கடை எனக்கு தெரியும்ல..அது எங்க தாத்தா வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர் கடைதான் ..." என்றான் ராஜா... "அது ஒரு மைல் தூரம்லாடே இருக்கு.. பஸ்ல போனா துட்டும் காணாது.. வா நடந்து போவோம் நம்ம ரெண்டு பெரும் போய் எடுத்துட்டு வருவோம், மீதி துட்டுக்கு இவங்க ரெண்டுபேரும் போய் ரொட்டி வாங்கிட்டு வரட்டும்...வெள்ளதுரைல போய் வாங்குங்கடே அங்கதான் நெறையா சால்னா குடுப்பான்" என்று அவர்களிடம் சொல்லும்போது, "நீங்க நேத்தே சொல்லி இருந்தா நான் சுங்காமுத்துல வாங்கிட்டு வந்திருப்பேன்டே, அங்கதான் சால்னா சூப்பரா இருக்கும்" என்றான் கண்ணன்...காலை வெயில் தார் ரோட்டை ஏற்கனவே உருக வைத்திருந்தது... ராஜா செருப்பு அணிந்திருக்கவில்லை.. நானும் அவனும் மாறி மாறி என்னுடைய செருப்பை போட்டு கொண்டு சென்றோம்...புளியங்குடி பஸ்ஸ்டாண்ட் அருகே ஒரு சைக்கிள் கடையில் நாள் வாடகைக்கு ரெண்டு சைக்கிள் (அரை வண்டி) எடுத்துக் கொண்டோம்... சத்தியமாக அன்றுதான் ரோட்டில் இடது பக்கம் சைக்கிள் ஒட்டி செல்ல வேண்டும் என்று எனக்கு தெரியும்...ராஜாதான் சொன்னான்...ராஜாவை என்னுடன் அழைத்து சென்றதில் வேறோர் சூட்சுமமும் இருந்தது. ராஜாவையும் கண்ணனையும் புரோட்டா வாங்க அனுப்பியிருந்தால் புரோட்டாவை நாங்கள் வருவதற்குள் காலி செய்திருப்பார்கள்...
கண்ணனும் ராஜேந்திரனும் புரோட்டாவுடன் ரெடியாக இருந்தனர்... பெரியசாமி கோயில் நோக்கிய எங்கள் பயணம் இனிதே துவங்கியது..

No comments:

Post a Comment