Friday, July 24, 2009

ஆண்டு விழா

அப்பொழுது நான் ஏழாவது படித்ததாக நினைவு. எங்கள் ஊரிலிருந்து 15 கி. மீ தூரத்தில் உள்ள புளியங்குடியில் உள்ள பள்ளியில்தான் நான் பயின்று வந்தேன். தூர்தர்ஷனின் ஒளியும் ஒலியும், ஞாயிற்றுக்கிழமை தமிழ் படங்கள், திருவிழாக்காலங்களில் 16 mm திரைப்படங்கள் (ஒவ்வொரு திருவிழாவிற்கும் இரண்டு திரைப்படங்கள் ஒரு பக்தி படம் ஒரு பாக்யராஜ் படம்! ) ஆகியவற்றை தவிர்த்து எங்கள் கலை தாகத்தை தீர்த்துக் கொள்ள ஒரே வடிகால் எங்கள் பள்ளியின் ஆண்டுவிழா.

அதற்கு ஆள் தேர்ந்தெடுப்பது ஒரு பெரிய வேலை. 'கரகாட்டக்காரன்' பாட்டுக்கு ஆடுவதற்கு முதலில் மலாக்கி சார் அழைத்து சென்று 'மாங்குயிலே பூங்குயிலே' பாட்டுக்கு என்னை ஆட சொன்னார். நானும் பாடல் ஆரம்பித்தத்தில் இருந்து இரண்டு கைகளையும் தூக்கி இறக்கி ஒரே ஸ்டெப்பை போட்டு கொண்டிருந்தேன் (18 முறை என்று பாண்டி சொன்னான்). சரி இது வேலைக்கு ஆவாது என்று குழு நடனம் ஆடும் அணிக்கு என்னை அனுப்பி வைத்தார். அங்கு ஏதோ ஒரு ரஜினிகாந்த் பாட்டிற்கு ஆடி பயிற்சி செய்து கொண்டிருந்தனர். நானும் அவர்களுடன் சேர்ந்து ஆடினேன். அன்றைய பயிற்சி முடிந்து வெளியே செல்லும் முன் பத்மா மிஸ் என்னை கூப்பிட்டு "சிவப்பு சட்டை வாங்குறதுக்கு நாளைக்கு 75 ரூவா கொண்டு வந்துரு" என்றார்கள். "75 ரூவாயா? 75 பைசா கூட கெடயாது" என்றார் எங்கப்பா. சரி போகுது இந்த வருஷமும் நாடகத்திலேயே நடிப்போம் என்ற முடிவுக்கு வந்தேன்.

படிப்பில் படுகெட்டி என்று ஆரம்பித்து சராசரி மாணவன் என்ற பட்டத்தை நோக்கி நான் பயணிக்க ஆரம்பித்த காலம் அது. ஆண்டுதோறும் நாடகங்களில் முக்கிய வேடம் என்று ஆரம்பித்து , தேய்ந்து ஒன்பதாம் வகுப்பில் ஒரு ஆங்கில நாடகத்தில் சேவகனாக ஒரே ஒரு காட்சியில் வந்து சென்றேன். முதல் ரேங்க் மாணவனே முக்கிய நாயகன் என்னும் வினோத பழக்கத்தை கொண்டிருந்தது எங்கள் பள்ளி. எட்டாம் வகுப்பில் மொத்தமாய் பன்னிரெண்டு கிலோ இருந்த எனக்குத் தளபதி வேடம் கொடுத்தனர். பெரியதாக மீசை வேறு. இப்பொழுது யோசித்துப் பார்த்தால் சுனா பானா போல் இருந்திருக்கிறேன். அந்த வருடம் (ஏழாம் வகுப்பு) ஆண்டு விழா நாடகத்தில் நானும் ராஜாவும் முக்கிய வேடம் ஏற்றிருந்தோம். ராஜா பணக்கார ஊதாரி தந்தை, நான் அவரை திருத்தும் ஒழுக்க புத்திரன். ஆண்டு விழா அன்று பள்ளி விடுமுறை. எங்கள் அனைவரையும் பயிற்சிக்காக காலையிலேயே வர சொல்லி இருந்தனர். அதற்கு முந்தைய நாள்தான் நானும் ராஜாவும் ஒரு திட்டம் தீட்டினோம்.

2 comments: