Saturday, August 1, 2009

பெரியசாமி கோயில்

முந்தலுக்கு செல்லும் பாதை எங்கள் பள்ளியை ஒட்டியே இருந்தது. நாங்கள் கிளம்பிய வேளையில் பள்ளியில் ஒருவரும் தென்படவில்லை. மிகவும் குறுகிய அந்த கரடுமுரடான பாதையில் சைக்கிளில் சென்றது எனக்கு புது அனுபவமாக இருந்தது. கண்ணனுக்கோ வேதனையாக இருந்தது. அவன்தானே சைக்கிள் மிதித்தான். அவனை வைத்து மிதிக்கும் அளவுக்கு எனக்கு தெம்பு இல்லை. ராஜேந்திரனும் ராஜாவும் மற்றொரு சைக்கிளில் மாறி மாறி ஒட்டி வந்தனர்.
முந்தலை சென்று அடைந்ததும் சிறிது இளைப்பாறி கொண்டோம். அது கோடை காலம் ஆதலால் முந்தலில் மிகவும் குறைவாகவே தண்ணீர் கொட்டியது. "பெரியசாமி கோயில்ல இன்னும் நெறைய தண்ணி ஓடும்டே" என்றான் ராஜா... கொஞ்சம் புளியங்காய் அடித்து தின்றுவிட்டு தண்ணீர் குடித்துவிட்டு கிளம்பினோம். முந்தல் தாண்டி சிறிது தூரம் வரை சைக்கிளில் செல்ல முடியும் என்று அங்கே ஒரு வயசாளி கூறினார்.

அது ஒரு ஒத்தையடி பாதை போல இருந்தது. ஒரு புறம் புதர் செடிகள் மறு புறம் பள்ளத்தாக்கு என்று திகிலாக இருந்தது அந்த பாதை.கண்ணன் நேர்த்தியாக சைக்கிள் ஓட்டினான்.ஒரு இடத்தில் பாதை முடிவுற்று சில வீடுகள் தென்பட்டன.அந்த வீடுகள் இருந்த இடத்தின் முகப்பில் "தமிழ்நாடு ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது" என்று எழுதி இருந்தது. "எலேய் இவங்க காட்டுவாசில்லா... இங்க நம்மள பிடிச்சு வச்சுருவாங்கடே" என்றான் கண்ணன். "அதெல்லாம் ஒண்ணும் செய்யமாட்டாக.. நம்மள விட இவுகதான் நல்லவக" என்றான் ராஜேந்திரன்..நாங்கள் அங்கு ஒரு வீட்டின் அருகே சென்று "சைக்கிளை இங்க நிறுத்திக்கிடுதோம்" என்று சொன்ன போது உள்ளே சாப்பிட்டு கொண்டு இருந்தவர் "எங்க வந்தீய? கஞ்சி குடிக்கியளா?" என்றார். "வேண்டாம் நாங்க பெரியசாமி கோயிலுக்கு வந்தோம்" என்றேன். "அப்டியா அப்டீன்னா இந்த தீப்பெட்டியும் சூடனும் எடுத்துட்டு போங்க.. போய் சூடம் ஏத்தி கும்பிட்டுட்டு வாங்க" என்றார். சரி என்று வாங்கி கொண்டேன்.

அங்கிருந்து சுமார் ஒரு மைல் தூரம் நடந்து சென்ற பின் எங்கள் கண் முன்னே விரிந்தது ஒரு கண்கொள்ளா காட்சி.. ஒரு பொட்டு வெயில் கூட நுழைய விடாமல் அடர்ந்த மரங்கள், அதற்கு நடுவே துள்ளிக் குதித்தோடும் ஒரு சிறிய ஆறு. அதை பார்த்த அந்நேரத்தில் நாங்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை..வேகமாக உடைகளை களைந்து விட்டு நீரில் குதித்தோம்..ஆற்றில் மீன்கள் வேறு எக்கச்சக்கமாக மிதந்தன.. நன்றாக குளித்த பிறகு பசி வயிற்றை கிள்ளியது...போட்டி போட்டு கொண்டு புரோட்டாவை காலி செய்தோம்..சிறிது நேரம் அங்கே விளையாடி விட்டு செல்லலாம் என்று நினைத்த போது "நாம மீன் பிடிச்சு சுட்டு தீம்போமா" என்றான் ராஜேந்திரன்.

ஒரு துண்டை எடுத்து அதன் இருபுறமும் ஆளுக்கு ஒருவராக நானும் ராஜாவும் பிடித்து கொண்டோம்.. கண்ணனை சுள்ளி பொறுக்கி வர சொல்லி விட்டு ராஜேந்திரன் மீனைச்சுட ஒரு இடம் தேர்ந்தெடுத்தான்.. ஆற்றின் நடுவே ஒரு பெரிய பாறை இருந்தது.. அதன் மீது ஒரு காய்ந்த மரம் சாய்ந்து கொண்டு நின்றது...அந்த பாறையில் அமர்ந்து மீனை சூட தயார் ஆனான் ராஜேந்திரன்.. முதல் பிடியில் மூன்று மீன்கள் சிக்கின.."கொண்டாடே எப்டி இருக்குனு பாப்போம்" என்றான் ராஜேந்திரன்.அதற்குள் சிறிதாய் தீ வளர்த்திருந்தான் அவன்.
சிறிய மீனின் கழுத்தை திருகி தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்தான்..பின்னர் ஒரு குச்சியில் அதை குத்தி லேசாக தீயில் வாட்டினான்..அதற்குள் அந்த குச்சி தீப்பிடித்து எரிந்தது.."நான் கீழ போய் எதாச்சும் கம்பியும் உப்பும் முளவாத்த பொடியும் வாங்கிட்டு வாரேன்" என்று சொல்லி விட்டு ராஜேந்திரன் சென்றான். "அவன் சென்ற பிறகு தீ எரிக்கும் வேலையை கண்ணன் ஆரம்பித்தான்.. அப்போது ஆரம்பித்தது வினை.. சிறு சிறு குச்சிகளாய் ஆரம்பித்து மெதுவாய் பெரிய தடிகளை தீயினுள் எறிந்தான் புரோட்டா தின்ன கண்ணன்.
தீ மள மளவென பற்றி எரிந்தது.

நானும் ராஜாவும் காட்டுக்குள் சிறிது தூரம் நடக்க சென்றோம் ஆங்காங்கே யானைச்சாணம் தென்பட்டது..ஒரு இடத்தில் இருந்த சாணத்தை பார்த்து "இப்பந்தாம்ல போட்டு போயிருக்கு" என்றான் ராஜா. ஆம் அதில் புகை பறந்து கொண்டிருந்ததை பார்த்து பதறி."ஏலே அப்பம்னா அது இங்கதான எங்கயாச்சும் இருக்கும்" என்று நான் மெதுவாக வந்த திசை நோக்கி ஓட ஆரம்பித்தேன்.. அவன் என்னை முந்திக்கொண்டு ஓட ஆரம்பித்தான்...ஓட்டமாய் ஓடி கண்ணன் இருந்த இடத்தை அடைந்த போது அங்கே ஒரு பெரும் பிரளயமே காத்து இருந்தது. அவன் பற்ற வைத்த நெருப்பு அந்த பாறையின் மீது சாய்ந்து நின்ற பெரிய காய்ந்த மரத்திலும் பற்றி கொண்டது. சிறிய மலை போல் தீ மள மளவென எரிந்து கொண்டிருந்தது.கண்ணன் கையை கட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்."எங்கல போனீய?"என்றான்.நாங்கள் செய்வதறியாது திகைத்து நின்றோம். அந்த மரத்தை சுற்றி மேலும் பல காய்ந்த மரங்கள் இருந்தன..அது வரை அவ்வளவு பெரிய தீயை நாங்கள் பார்த்ததே இல்லை.இந்த நெருப்பு தொடர்ந்தால் காட்டையே அழித்துவிடும் என்று தோன்றியது..இதற்குள் ராஜேந்திரனும் வந்து சேர்ந்திருந்தான்.."கெடுத்துபுட்டியே கதைய" என்றான் கண்ணனை நோக்கி..நாங்கள் என்ன செய்வதென்று கையை பிசைந்து கொண்டிருந்தோம்.

ராஜேந்திரன் வேகமாக ஓடி சென்று ஆதிவாசிகள் குடியிருப்பில் கண்ட அந்த பெரியவரை அழைத்து வந்தான். "என்ன வேலைய்யா பாத்து வெச்சுருக்கீக" என்று புலம்பிகொண்டே அந்த நெருப்பின் அருகே சென்றார்..சில வினாடிகள் யோசித்து விட்டு மரத்தின் அடிப்பாகத்துக்கு அருகே சென்றார்.அதை சுற்றி இருந்த சருகுகளை ஒரு பெரிய கம்பால் விலக்கிவிட்டு மெதுவாய் அந்த மரத்தின் அடிப்பாகத்தை லேசாக தள்ள முயற்சித்தார்..எங்களால் அதன் அருகில் கூட செல்ல ஏலவில்லை.வெக்கை கடுமையாக இருந்தது. அவர் முழு மூச்சுடன் மரத்தை தள்ளினார் அது மெதுவாக உருண்டு ஆற்றுக்குள் பெருத்த சத்தத்துடன் விழுந்தது.. சிறிது நேரம் மூண்ட புகையில் எங்களுக்கு கண்ணே தெரியவில்லை.கொஞ்ச நேரத்தில் புகையும் நெருப்பும் அடங்கி அந்த இடமே நிசப்தமானது போல தோன்றியது.

"உங்க யாருக்கும் கை பொக்கலல்லா?" என்றார் அவர்..கண்ணனுக்கு மட்டும் லேசாக கையில் சூடுபட்டிருந்தது. அவனை கூட்டிப்போய் ஏதோ பச்சிலை அரைத்து கையில் கட்டி விட்டார். எனக்கு எம்.ஜி.ஆர் படம் பார்ப்பது போல் இருந்தது.
ஏதோ ஒரு இனம்புரியாத மௌனம் எங்களிடையே புகுந்திருந்தது.அங்கிருந்து சைக்கிள் எடுத்துக்கொண்டு எதுவும் பேசாமல் கிளம்பினோம்.கண்ணனை பின்னால் உட்கார வைத்து நான் ஒட்டி கொண்டு வந்தேன். நல்ல இறக்கம் ஆதலால் சுளுவாக ஒட்டி கொண்டு வந்தேன். அதன் பிறகு நாங்கள் முந்தலுக்கு போகவே இல்லை.

1 comment:

  1. story is very nice.. me too from kadayanallur.
    waiting for the next post.

    ReplyDelete