Friday, August 28, 2009

சுவாமியும் நண்பர்களும் - 1

"எல்லாரும் பேப்பர கைல குடுத்துட்டு அப்டியே வெளில வாங்கல" என்றார் ஜெயராஜ் சார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு முன்னதாக மாதிரி தேர்வு என்று ஒன்று, இல்லை இல்லை, மூன்று வைக்கப்படும்.அதில் மூன்றாவது மாதிரி தேர்வில்தான் இந்த கூத்து. இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே அதுக்குள்ளையும் எதுக்குல கூப்புடுதாரு? என்று எண்ணியபடி பேப்பரை குடுத்துவிட்டு கிளம்பினோம். வெளியே வந்தால் சம்சுதீன், சார்வாள் முன் தலையை கவிழ்த்தபடி நின்று கொண்டிருந்தான்.

பத்தாம் வகுப்பு மாணவர்களும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களும் கண்டிப்பாக விடுதியில் தங்கி படிக்க வேண்டும் என்பது எங்கள் பள்ளியின் நியதி. சரி விடுதி என்றால் ஏதோ ரெண்டு பேருக்கு ஒரு அறை என்றெல்லாம் இல்லை. மொத்தம் ஒரே ஒரு அறைதான். அங்கே எல்லோரும் தங்களுடைய உடைமைகளை வைத்துவிட்டு இரவில் ஏதேனும் ஒரு வகுப்பறையில் படுத்து கொள்வோம். குளிப்பதற்கு ஒரு பெரிய தொட்டியில் தண்ணீர் தேக்கி வைக்கபட்டிருக்கும், கழிப்பதற்கு கண்மாய். பெண்கள் விடுதி பரவாயில்லை அவர்களுக்கு சகல வசதியும் உண்டு.

சுவாமி பொதுவாகவே நண்பர்களுக்காக எதையும் செய்பவன். ஒரு சனிக்கிழமை காலை குளிக்கையில்தான் அவன் இடுப்பில் தொங்கும் பெரிய சாவிக்கொத்தை கண்டேன். விடுதியில் சனிக்கிழமை காலை குளிக்கும் பழக்கம் எங்கள் இருவருக்கும் மட்டுமே உண்டு. "என்னடே சாவி?" என்று வினவினேன். "ஒண்ணுமில்லலே நம்ம சம்சுதீன் ரெண்டு ரிவிசன் டெஸ்ட்லயும் எல்லா பாடத்துலையும் பெயில் தெரியும்லா" என்றான். "அதுக்கு இப்ப என்னலே? நீ என்ன செய்ய போற?" "இல்லடே அவன் இந்த தடவை எல்லா பாடத்துலையும் பாஸ் பண்ணாட்டி பப்ளிக் எழுத விடமாட்டேன்னு ஜெயராஜ் சார் சொல்லியிருக்காரு , அதான் இன்னைக்கு ராத்திரி பிரின்சிபால் ரூம்ல பூந்து கொஸ்டின் பேப்பர ஆட்டைய போட போறேன் நீயும் வாரியா? " என்றான். "மாட்டுனா சங்கு ஊதிருவாங்கடே " . "அதெல்லாம் மாட்டாம எப்டி எடுக்கணும்னு எனக்கு தெரியும் நீ வாரியா வரலையா? " ." சேரி போவோம்" என்று சொல்லி தொலைத்தேன்.

அன்று இரவு பன்னிரண்டு மணிக்கு பூட்டை திறப்பதாய் உத்தேசம். ஒன்பது மணிக்கு மாரியப்பன் சார் ரவுண்ட்ஸ் வருவார். வந்துவிட்டு பதினோரு மணிக்கு கிளம்பி போய் விடுவார். அதற்கு அடுத்த ஒரு மணி நேரத்தில் அனைவரும் தூங்கி விடுவர். இதில் பெரும் இடர் யாதெனில் பன்னிரெண்டாம் வகுப்பு அண்ணன்கள். என்னவோ எல்லோருமே எம்.பி.பி.எஸ். ஆக வேண்டும் என்ற இலட்சியத்துடன் படித்து கொண்டிருப்பர்.

பன்னிரண்டு மணிக்கு நானும் சுவாமியும் முதல் மாடியில் இருந்த ஆறாம் வகுப்பில் இருந்துகொண்டே எதிரில் இருந்த பிரின்சிபால் அறையை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தோம். பிரின்சிபால் அறையின் வாசலில் அமர்ந்து கொண்டு ஆறுமுகச்சாமி அண்ணன் "Chloroplasts are the actual sites for photosynthesis" என்று இருநூறு முறை கூவி கொண்டிருந்தார்.

இவர் தூங்குதமாறி தெரியலையேடே என்று எண்ணியபடி படிக்கட்டில் மெதுவாக இறங்கலாம் என்று போனால் வாசலில் ஆறுமுகசாமியின் பரம வைரி செந்தில் அண்ணன் உக்காந்து பாதி தூக்கத்தில் "rate of reaction increases with increase in temperature" என்று காற்றில் படம் வரைந்து கொண்டிருந்தார். சாமி திடீரென்று " எலே மாரியப்பன் சார் நெசம்மாவாடே படத்துக்கு பேட்டு இங்க வாரேன்னு சொன்னாரு " என்றான். அது என்னவென்று புரிந்து நான் சுதாரிப்பதற்குள் செந்தில் அண்ணா எங்களை நோக்கி "முதல்லே சொல்ல கூடாதாடே அவர் பன்னெண்டு மணிக்கு மேல நாங்க முழிச்சிருக்கத பாத்தா கொன்னே போட்டுருவாரு" என்று கூறி விட்டு வேகமாக புத்தகத்தை மடித்து வைத்து விட்டு ஆறுமுகசாமியை நோக்கி சென்று விஷயத்தை கூறினார். அவர் நம்பாமல் எங்களிடம் கேட்டார். நான் ஆம் என்று தலையசைத்த பின்னர் அவரும் தூங்க சென்றார்.

நானும் சுவாமியும் சிறிது நேரம் தூங்குவது போல் நடித்து சுமார் அரைமணி நேரம் கழித்து வந்து பூட்டை திறந்தோம். சுவாமிநாதன் ஏற்கனவே அந்த பூட்டு எண்ணை ஆராய்ந்து வைத்திருந்தான். அது ஆல்பா பூட்டு எனவே சாவி கிடைப்பது எளிது என்று பின்னொரு நாள் கூறினான். அவனிடம் ஒரு சாவி லைப்ரரியே இருந்தது. உள்ளே புகுந்த நாங்கள் உள்வழியாக கதவை சாத்திவிட்டு தயாராக வைத்திருந்த மெழுகுவர்த்தியை ஏற்றினோம். டேபிளில் இருந்த குடுவையின் உள்ளே ஒரு சாவிகொத்து இருந்தது.

அதில் இருந்து ஒவ்வொரு சாவியாக எடுத்து டிராயரை திறக்க முயன்றோம். நான்காவது முயற்சியில் திறந்தது. உள்ளே கை விட்டு துழாவி ஒவ்வொரு கட்டாக ஆராய்ந்தோம். அந்த வாரம் தேர்வு நிகழும் மூன்று பாடங்களுக்கு மட்டுமே வினாத்தாள் இருந்தது. ஒவ்வொரு கட்டும் ஒரு பாலிதீன் பையில் சுற்றபட்டிருந்தது. ஒரே ஒரு விரல் மட்டும் உள்ளே நுழையும் அளவிற்கு அந்த பாலிதீன் பையில் துளையிட்டு , ஒரு விரலை உள்ளே நுழைத்து ஒரே ஒரு வினாத்தாளை மட்டும் விரலால் சுருட்டி வெளியே எடுத்தான் சுவாமி. நான் வாய்பிளந்து நின்றேன். எடுத்த வினாத்தாளை என்னிடம் கொடுத்து பத்திரப்படுத்த சொன்னான்.

இவ்வாறு ஒவ்வொரு கட்டில் இருந்தும் ஒரு வினாத்தாள் எடுத்த பின்னர் மெழுகுவர்த்தி நெருப்பில் அத்துளைகளை வாட்டி அடைத்தான். நான் இதற்குள் பயத்திலும் வேர்வையிலும் குளித்திருந்தேன். எல்லாவற்றையும் இருந்த இடத்தில் வைத்துவிட்டு "அவ்வளவுதாண்டே" என்று மெழுகுவர்த்தியை அணைத்த அடுத்த நொடி..........................கதவு தட்டப்பட்டது...

No comments:

Post a Comment