Monday, January 25, 2010

சுவாமியும் நண்பர்களும் - 2

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு...நான் மெதுவாக டேபிளுக்கு அடியில் ஒளிந்து கொள்ள எத்தனித்தேன். சாமி தைரியமாக சென்று கதவை திறந்தான்.. வெளியே சபரியும், முத்துகண்ணனும் நின்று கொண்டிருந்தனர்.."என்னல செய்தீய.." என்று சபரி தலையை உள்ளே நீட்டினான்.."உள்ள வாங்கல " என்று ரகசியமாய் கூறி அவர்களை உள்ளே இழுத்தான் சுவாமி. நாங்கள் செய்த வேலைகளை ஆராய்ந்து பார்த்த சபரி "எனக்கும் கொஸ்டின் பேப்பர் குடுங்கல" என்றான்.

எங்கள் ஆட்டத்தில் அவர்களையும் சேர்த்துக்கொண்டாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானோம். மூன்றாவது ரேங்க் மாணவனான சபரி பத்தாவது ரேங்கை நோக்கி சென்று கொண்டிருந்த காலம் அது.தன் மாணவ தோழிகளிடையே தன்னுடைய புகழை நிலை நிறுத்த வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்தது. "சரிடே உனக்கும் தாரேன்" என்று கூறி விட்டு சுவாமி வெளியேற ஆயத்தமானான். உள்ளது உள்ளபடி செய்து விட்டு நாங்கள் வெளியேறினோம்.

சுவாமி நேராக சம்சுதீனை எழுப்பி அவன் கையில் வினாத்தாளை கொடுத்துவிட்டு கிளம்பினான். "ஒழுங்கா பாஸ் பண்ற வழிய பாருல" என்று கூறி விட்டு தூங்க சென்றான். "காலைல ஆறு மணிக்கு என்னைய எழுப்பிருலே" என்று கூறிவிட்டு தூங்க சென்றான். தினமும் அதிகாலையில் எழுந்து பூஜை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தான் அவன். நான் பொதுவாக தேர்வு கால விடுமுறைகளில் பகலில் மட்டுமே தூங்குவேன்.வினாத்தாள் கையில் கிடைத்த அடுத்த நொடியில் இருந்து சம்சுதீன் படிக்க தொடங்கி விட்டான். எனக்கு அதை எடுத்து படிக்கலாமா வேண்டாமா என்று இரண்டு மனதாக இருந்தது. சரி வேண்டாம் பாத்துகிடுவோம் என்று விட்டு விட்டேன். அடுத்த நாள் மொத்த ஹாஸ்டலும் வினாத்தாளை வைத்து படித்து கொண்டிருந்தது . சுவாமி அதை கண்டுகொள்ளவே இல்லை. இந்த சாகச செயல்கள் எல்லா பரிட்சைக்கும் தொடர்ந்தன.
ஒவ்வொரு பாடத்திலும் அனைவரும் நல்ல மதிப்பெண் பெற்றது கண்டு ஜெயராஜ் சார் பேரானந்தத்தில் இருந்தார்.எங்களுக்கு இன்று வரை ஏன் என்று புரிந்ததில்லை.அவர் எல்லா மாணவர்களையும் எல்லா பாடத்திலும் பாஸ் ஆகும் வரை விட மாட்டார். "இவர கெமிஸ்ட்ரிய மட்டும் பாத்துக்கிட்டு சும்மா இருக்க சொல்லுங்கடே " என்று டார்வின் கருவுவான்.

இப்படியாக போய் கொண்டிருந்த ரிவிஷன் தேர்வின் கடைசி பரிட்சையான வரலாறு பரிட்சை அன்றுதான் ஜெயராஜ் சார் எல்லோரையும் பேப்பரை வைத்து விட்டு வெளியே வர சொன்னார். என்ன ஆச்சு என்ற குழப்பத்தில் எல்லோரும் வெளியேறினோம். வெளியே தலை குனிந்தபடி சம்சுதீன் நின்று கொண்டிருந்தான். எனக்கு வயிறு ஏதோ செய்தது. டக்கென்று சுவாமியை பார்த்தேன். அவனோ வேண்டுமென்றே என்னை தவிர்த்து வேறு யாரிடமோ ஏதோ பேசிக்கொண்டிருந்தான்.
"எனக்கு கணேஷ்ராஜா கணக்குல எழுவது மார்க் வாங்கும்போதே பொறி தட்டுச்சுலே" என்றார் அவனிடம். உண்மைதான், அதற்கு முன் கணக்கில் கணேஷ்ராஜாவின் அதிகபட்ச மதிப்பெண் இரண்டு.

அதெல்லாம் சரி இவன் எப்படி மாட்னான் என்று நாங்கள் யோசித்த வேளையில் அங்கே வந்த பியுன்

அண்ணாச்சி "சார் உங்கள பிரின்சிபால் சார் கூப்புடுறாங்க" என்றார் . எங்களை பார்த்து முறைத்து விட்டு சார் பிரின்சிபால் அறை நோக்கி சென்றார் சம்சுதீன் அருகே அமர்ந்திருந்த சபரியை கேட்டோம் என்ன

ஆச்சு என்று. "லூசு பயடா இவன் என்ன செஞ்சான் தெரியுமா?" என்று விளக்கினான். வினாத்தாள் கொடுக்கப்படும் முன்னே

ஆர்வகோளாறில் விடை எழுத ஆரம்பித்துவிட்டான் சம்சுதீன். அதுவும் ஒன் வேர்ட் கேள்விக்கெல்லாம் பதில் எழுதி இருக்கிறான்.

இன்னைக்கு செத்தோம் என்று நினைத்த வேளையில் மாரியப்பன் சார் உள்ளே நுழைந்தார். "என்னடே இங்க நிக்கிய ? பரீட்சை எழுதலியா?" என்றார். நான் திரு திருவென முழித்தேன். அப்போது ஜெயராஜ் சாரும் வந்தார். அவர் விஷயத்தை சொன்ன உடன் பொங்கி எழுந்து கண்ணில் கண்டவனை எல்லாம் புரட்டி எடுத்தார்.விஜயின் கண்ணாடி எங்கேயோ பறந்து நொறுங்கியது "எங்க இருந்துல கொஸ்டீன் எடுத்தீங்க ?" என்று கேட்டார். ஒருவரும் வாயை திறக்கவில்லை. "எல்லாரும் வீட்டுக்கு போயிட்டு பேரன்ட்ஸ கூடி வாங்க என்றார். நாங்கள் அப்படியே நின்று கொண்டிருந்தோம். அவர் நன்றாக திட்டிவிட்டு கிளம்பினார். நாங்க செய்வதறியாமல் ஹாஸ்டல் ரூமில் சென்று உக்காந்திருந்தோம். ஜெயராஜ் சார் ஒவ்வொருவராக கூப்பிட்டு விசாரித்து பார்த்தார். ஒருவரும் வாயை திறக்கவில்லை.

ஜெயராஜ் சார் கடுப்பாகி மதிய உணவு கொண்டு வந்த தாத்தாவிடம் ராத்திரி ஒண்ணும் பண்ண வேண்டாம் எல்லாரும் ஊருக்கு போறாங்க என்றார். மதியம் சாப்பிட்டு விட்டு அவரவர் ஊருக்கு கிளம்பினோம்.

நான், முஸ்தபா, விஜய் மூவரும் கடையநல்லூர் நோக்கி பேருந்தில் சென்றோம். சாமி எங்களோடு வரவில்லை. விஜய்தான் புலம்பிக்கொண்டே வந்தான். அவனுடைய அப்பா போலீஸ்காரர் , பயங்கர கண்டிப்பு. கண்ணில் கண்ணீர் பொங்க புலம்பிக்கொண்டிருந்தான். முஸ்தபா அவனை சமாதானபடுத்தி பார்த்தான் பயன் இல்லை. பேருந்து நிலையத்தில் இறங்கியதும் "நான் எல்லார்டையும் போன் போட்டு கேட்டு சாயங்காலம் என்ன பண்ணலாம்னு சொல்லுதேம்ல.. நீங்க ரெண்டு பேரும் ஏழு மணிக்கு அட்டகுளத்துக்கு வந்துருங்கல" என்று சொல்லிவிட்டு முஸ்தபா கிளம்பினான்.

நான் வீட்டிற்கு சென்று எதுவும் வாய் திறக்கவில்லை. சைக்கிளை எடுத்துக்கொண்டு சாமியின் வீடு இருக்கும் கிருஷ்ணாபுரத்தை நோக்கி அழுத்தினேன். அவன் பெரும்பாலும் ஆஞ்சநேயர் கோவிலில்தான் இருப்பான். நான் மெயின் ரோட்டில் இருந்து பார்த்த போதே ஆஞ்சநேயர் கோவிலில் அவன் தலை தெரிந்தது.

வயல்களுக்கு ஊடே அமைந்திருக்கும் ஆஞ்சநேயர் கோயில் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான, பிடித்தமான ஒரு இடம். என்னுடைய பள்ளி பருவத்தில் இப்பொழுது இருப்பது போல் அக்கோவில் சீரமைக்கப்படவில்லை. ஆனால் இப்போதைவிட அப்போது இருந்த கோவிலே என் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக நினைவில் தேங்கி நிற்கிறது. என்னுடைய பதின்வயதுகளில் நானும் என் தந்தையும் ஞாயிறுதோறும் முற்போக்குக் கருத்துக்களை உரையாடிக்கொண்டு ஆஞ்சநேயர் கோயில் வரை நடந்து சென்று சிறிது நேரம் அமர்ந்து விட்டு வருவோம்.

சாமியை பார்த்ததும் அவன் முகத்தில் கவலையின் ரேகைகள் படர்ந்திருந்தது. "நாம மாட்டிகிட்டோம்" என்றான்.

No comments:

Post a Comment