Monday, January 25, 2010

சுவாமியும் நண்பர்களும் - 3

சாமியும் நானும் தெப்பக்குளத்தின் படிக்கட்டில் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தோம். பரோபகாரம் குறித்து சமஸ்கிருதத்தில் ஏதோ பேசினான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. "குமார் கேரளால எங்கல இருக்கான்?" என்றான். குமார் ஆறாம் வகுப்பு வரை எங்களுடன் பயின்ற தோழன். ஒன்றிரண்டு வயது எங்களை விட மூத்தவன். அவனுடைய தந்தை துபாய் செல்ல பணம் கட்டி ஏமாந்ததால் அந்த கடனை அடைக்க இவன் படிப்பை விட்டு கேரளாவிற்கு வேலைக்கு சென்றான். 

"எர்ணாகுளம் சீமாட்டில" என்றேன். "சரி நீ வீட்டுக்கு போ ஒருத்தர்கிட்டையும் ஒண்ணும் சொல்லாத"  என்றான். "யாரும் மாட்டிவிட மாட்டாங்கடே" என்ற என்னை ஏளனமாக பார்த்தான்.
அங்கிருந்து நேராக அல்லிமூப்பன் தெரு நோக்கி சென்றேன். முஸ்தபா தெரு முனையில் நின்று கொண்டிருந்தான். மாட்டி கொண்டதற்கான எந்த கவலையும் அவன் மூஞ்சியில் இல்லை. "வாடே நேஷனல்ல போய் அல்வா சாப்டு போவோம்" என்றான் .அவன் அல்வா மிக்சர் சாப்பிட நான் டீ மட்டும் குடித்தேன். நாங்கள் அட்டகுளத்திற்கு சென்ற சிறிது நேரத்தில் விஜயும் வந்து சேர்ந்தான். "எல்லார்டையும் பேசிட்டென்ல, நம்ம ஒருத்தரையும் கூட்டி போக வேண்டாம். எப்டியும் நம்மள பிராக்டிகல் எழுத விட்டுதான் ஆவணும். அடுத்த வாரம் பிராக்டிகல் இருக்கு. இந்த வாரம் மாடல் பிராக்டிகல் வச்சாதான அடுத்த வாரம் பிராக்டிகல் வெக்க முடியும்" என்றான். அது சரி என்றே பட்டது. ஆனா ஒரு வாரம் டார்ச்சர் பண்ணுவாங்க என்று தோன்றியது.
 திட்டமிட்டபடி மறுநாள் அனைவரும் பள்ளிக்கு சென்றோம். எதிர்பார்த்தபடி ஒருவரும் வகுப்பறைக்குள் அனுமதிக்கபடவில்லை. ஹாஸ்டலில் சாப்பிட்டுவிட்டு மரத்தடியில் நின்றுகொண்டு பொழுதை போக்கினோம். ஜெயராஜ் சார் பல வழிகளில் துப்பறிந்து பார்த்தார். ஒருவரும் வாய் திறக்கவில்லை.


இரண்டு நாட்கள் இப்படியே ஓடின. மூன்றாவது நாள் ஜெயராஜ் சார் ஒரு புதிய குழப்பத்தை உருவாக்கினார். அரையாண்டுத் தேர்வு வரை அனைத்து பாடங்களிலும் பாஸ் ஆனவர்களுக்கு மட்டும் மாடல் பிராக்டிகல் என்றார். இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் ஏதும் திட்டமிடும் முன் ஜெயராஜ் சார் உள்ளே புகுந்து சிறு குழுக்களாக பிரிக்க ஆரம்பித்தார். பெயில் கும்பலை நோக்கி "நீங்கல்லாம் வீட்ல இருந்து யாரையாச்சும் கூட்டிட்டு வாங்கப்பா, கெளம்புங்க  " என்று தீர்க்கமாக கூறிவிட்டு சென்றார். நாங்கள் அரை மனதோடு லேப் நோக்கி சென்றோம். நாங்கள் உள்ளே சென்ற சில நொடிகளில் ஒரு உருவம் ஜெயராஜ் சாரின் அறை நோக்கி சென்றது.
அதன்பிறகு நடந்தது என் வாழ்வின் எந்த சூழலிலும் மறவாதது. இன்றளவிலும் என் தூக்கத்தை புரட்டிபோடும் நிகழ்வு அது. நானும் டார்வினும் லேப் மாடியின் வெளியே நின்றுகொண்டிருந்தோம். கீழே ஜெயராஜ் சார் கண்கள் சிவக்க என்னை நோக்கி "இங்க வா" என்றார். நான் முடிந்தது கதை என்று நினைத்து கொண்டு கீழே சென்றேன். "போய் மாரியப்பன் சாரை கூப்டு வா " என்றார். நான் போய் அவரை கூட்டி வரும் முன் பிரின்சிபாலும் அங்கே வந்து சேர்ந்திருந்தார். மாடியில் இருந்து சாமி இறங்கி நடந்துவந்து கொண்டிருந்தான். அவன் என்னை கவனிக்கவில்லை. அவன் இறங்கி வந்த உடன் பிரின்சிபால் அவனை கையால் அடிக்க ஆரம்பித்தார். அவன் தன்னுடைய கைகளால் முகத்துக்கு நேரே நீட்டி தடுத்துக்கொண்டிருந்தான். நாங்கள் அங்கே போய் சேர்ந்தவுடன் "ஒரு பிரம்பு எடுத்துட்டு வால" என்றார் ஜெயராஜ் சார். அப்போதுதான் சாமி திரும்பி என்னைப் பார்த்தான். பார்த்த அடுத்த நொடி பிரின்சிபாலின் அடியை தடுத்துக் கொண்டிருந்த அவனுடைய கைகளை கீழே போட்டான். அவன் கண்கள் சிவந்து என்னை நோக்கி நிலை குத்தி நின்றன. என்னையும் மாரியப்பன் சாரையும் ஒன்றாக கண்ட அவன் நான்தான் மாட்டிவிட்டேன் என்று தவறாகப் புரிந்துகொண்டுவிட்டான். ஜெயராஜ் சாரும் மாரியப்பன் சாரும் சேர்ந்து அடித்த அடிகளை இமைகளை கூட இமைக்காமல் சிலை போல நின்று வாங்கி கொண்டிருந்தான். அந்த நொடி என்னுடைய கோழைத்தனம் சுயநலம் இரண்டும் என்னை அவனுக்காக ஏதும் செய்ய விடாமல் தடுத்து நிறுத்தின. அடி என்றால் சாதாரண அடி அல்ல ஒவ்வொன்றும் எலும்பை நொறுக்கும் அடி. அடித்து ஒரு வேனில் தூக்கி போட்டு அவனை வீட்டிற்கு கூட்டி சென்றனர். மொத்த வகுப்பும் லேப் மாடியில் நின்று இதை பார்த்துகொண்டிருந்தது.


பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிந்து விடுமுறை விட்டபிறகும் சாமியை சென்று பார்க்க எனக்கு தைரியம் வரவில்லை. ஒருநாள் அப்பாவுடன் கடையில் அமர்ந்திருந்த பொழுது சாமியின் தந்தை வந்து "சாமிய ரெண்டு நாளா காணும்பா. உன்கிட்ட எங்கயாச்சும் போறேன்னு சொன்னானாப்பா" என்று பதட்டத்தோடு கேட்டார்.  அவன் கேரளாவுக்குத்தான் போயிருப்பான் என்று தோன்றியது, சொன்னேன். அத்தோடு சாமி குறித்து எந்த தகவலும் இல்லாமல் போனது.
இது முடிந்து பல ஆண்டுகள் கடந்து நான் வேலையிலெல்லாம் சேர்ந்த பிற்பாடு ஒரு நாள் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்ற போது சாமியின் தந்தையைக் கண்டேன். அவரிடம் சாமி குறித்து விசாரித்த போது அவன் சூரத் நகரில் ஏதோ வேலை பார்ப்பதாகவும் தற்சமயம் 

விடுமுறையில் வந்திருப்பதாகவும் சொன்னார்.


அதே யோசனையுடன் தெப்பக்குளத்தின் அருகே வந்த பொழுது அங்கே படிக்கட்டில் அமர்ந்து சாமி யாரிடமோ சமஸ்கிருதத்தில் ஏதோ சொல்லிக்கொண்டு இருந்தான்.

1 comment: